கொள்ளுப்பிட்டியில் இன்று காலை பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, துரதிர்ஷ்டவசமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 500,000 வழங்குமாறு இரண்டு நிறுவனங்களுக்கும் கூறியுள்ளார்.
லிபர்ட்டி சந்திக்கு அருகாமையில் கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இன்று காலை பயணிகள் பஸ் மீது மரம் விழுந்ததில் 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பயணிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து டூப்ளிகேஷன் வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்த போதிலும், சிறிது நேரத்திற்கு முன்னர் அது மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.