நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அதிகாரிகள்,
நயினாதீவிற்கும் குறிகட்டுவானுக்கும் இடையிலான போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பாரிய தனியார் பயணிகள் படகு குறிகட்டுவான் இறங்கு துறையில் நீண்ட நேரம் தரித்து நிற்பதால், நெடுந்தீவிற்கான பயணிகள் படகு சேவையை சீரான முறையில் உரிய நேரத்திற்கு முன்னெடுக்க முடிவதில்லை எனவும், இதனால் அரச உத்தியோகஸ்தர்களும் பயணிகளும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அசௌகரியங்களை களையுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஐப்பசி மாதத்திற்கான முதலாவது கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண நிர்வாகத்தினாலும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
மேலும், யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சட்ட விரோத, சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீக குடியிருப்புக்களையும் விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பொருத்தமான காணிகளையும் விடுவிக்கும் நோக்கில்,
1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த அரசாங்க திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அதேபோன்று, சட்ட விரோத மணல் அகழ்வு மற்றும் சட்ட விரோத மதுபான சாலைகள், அனுமதியற்ற முறையில் விவசாய நிலங்களில் கட்டிடங்கள் கட்டப்படுதல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அவற்றை பூரணமாக கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் மக்கள் பிரதிநிதிகளினால் அதிகாரிகளுகளுக்கு வழங்கப்பட்டது.
அதேபோன்று கால்நடை, விவசாயம் போன்ற துறைகளை விருத்தி செயதல் மற்றும் போக்குவரத்து தரப்பினர், சிகை அலங்கரிப்பாளர்கள் போன்றோர் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இன்றைய கூட்டத்தில், மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கழகங்களின் அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.