தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலையும் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்த இடைக்கால நிர்வாகக் குழுவில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.ஐ. இமாம், ரோஹினி மாரசிங்க, ஐரங்கனி பெரேரா, கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச, சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, பட்டய கணக்காளர் ஹிஷாம் ஜமால்டீன் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த புதிய இடைக்கால குழு நியமனத்துடன், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாக சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.