1,472 கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னார் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் உதவியுடன் வடமத்திய கடற்படைக் கட்டளையின் கஜபாவால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது நேற்றைய தினம் மன்னாரில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் உப்புக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 20 பிரேகபலின் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதன் பின்னர் முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், அவர் அவருடைய நண்பர் பற்றிய தகவலை வெளியிட்டதை அடுத்து அதே பகுதியில் நடத்தப்பட்ட தனி நடவடிக்கையில் குறித்த நபரும் கைது செய்யப்பட்டார்.
கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வீடொன்றிலிருந்து 1,432 பிரகபலின் மாத்திரைகளும் மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்து மேலும் 20 மாத்திரைகளும் மீட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலாவத்துறை மற்றும் மன்னார் பிரதேசங்களில் வசிக்கும் 28 மற்றும் 29 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் வாகனத்துடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.