வெட்கம் இருந்தால் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க அரச வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ!

அரச வீடுகளில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் வெட்கம் இருந்தால் குறித்த வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மகிந்த ராஜபக்சவின் மாளிகையை காப்பாற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரலெழுப்பி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகளும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீடு ஒரு ஏக்கர் மற்றும் 13.8 பேர்ச் கொண்டது. 30534 சதுர அடியை கொண்ட இந்த வீடு 3128.4 மில்லியன் பெறுமதியானதாகும். இரண்டு பேர் வசிப்பதற்கு இவ்வளவு பெரிய வீடு. மாதம் இந்த வீட்டுக்கு 46 இலட்சம் வாடகையை செலுத்த வேண்டும் என அரச மதிப்பீட்டு திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

இந்த வீட்டை காப்பாற்றதான் மகிந்த மற்றும் சஜித்தின் ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.

ஹேமா பிரேமதாசவை பார்த்துக்கொள்ள 2021, 2022ஆம் ஆண்டில் 8 இலட்சத்துக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசிக்கும் வீட்டை பராமரிக்க மாத்திரம் கடந்த சில வருடங்களாக 19 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்காக 16ஆயிரம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டுக்கு 2021ஆம் ஆண்டு 33 இலட்சம், 2022இல் 3 இலட்சத்து 95ஆயிரம் ரூபா, 2023இல் 18.336 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. மொத்தமாக 393 இலட்சம் 2023ஆம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ளது. மேலதிகமாக 9 இலட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறுதான் மக்கள் பணத்தில் இவர்கள் வாழ்கின்றனர். இந்த சுமையை மக்கள் மீது எவ்வாறு செலுத்த முடியும். மக்கள் இந்த சுமையை சுமந்துக்கொள்வது நியாயமா?

சந்திரிக்காவின் வீடு இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை. அவர் லண்டனில் இருப்பதாக கூறியுள்ளார். அவரது வீடு குறித்தும் மதிப்பீடு செய்யப்படும்.

இவர்களுக்கு வெட்கம் இல்லையா? தற்போது கூறும்வரை இருப்பதாக தெரிவிக்கின்றனர். கூறுவதற்கு ஒன்றும் இல்லை. வெட்கம் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்களால் பார்த்துக்கொள்ள முடியாதா? என்றார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply