
அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னுமும் நிர்ணயிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு தேவையான விதத்தில் அரிசி விலையை தீர்மானிப்பதற்காக அரசாங்கமானது நெல்லுக்கான உத்தரவாத விலையை தாமதப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது என்றும், இதில் ஏதோ சதி இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண பிரதேசங்களில் நெல் அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் நெல் விற்பனை செய்து முடித்த பின்னர், நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்கப் போகிறார்களா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன் காரணமாக, நெல் மாஃபியாக்கள் விரும்பும் விதத்தில் நெல்லின் விலையை நிர்ணயிக்கும் முறையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது என்று அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் சிவப்பு பச்சையரிசி, வெள்ளைப் பச்சையரிசி அரிசிகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அரிசி சந்தையில் காணப்பட்டாலும் 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் சிவப்பு சம்பா கிலோ ஒன்று 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.