
உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கு தகுதி பெற்றிருந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
அத்துடன் குறிப்பிட்ட தரப்பினருக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (10) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின் பாடத்திட்டம், கற்பித்தல் முறைமை, ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீடு, ஆளணி மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
இலங்கையின் கல்விமுறை தொழிற் சந்தையுடன் இணைந்ததாக இல்லை. இதன் காரணமாகப் பட்டதாரிகள் தொழிற்சந்தையில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே நாட்டினுடைய பாடத்திட்டங்களை தொழிற்சந்தையுடன் இணைந்ததாக மாற்றியமைக்க வேண்டும் என குகதாசன் வலியுறுத்தினார்.