மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம்- ஜெகதீஸ்வரன் எம்.பி!

மன்னார் மாவட்ட மக்களுடைய நலன் சார்ந்த, வாழ்வியலை, பொருளாதாரத்தை பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் பகுதியில் நேற்றையதினம் (19) கனிய மணல் ஆய்வு இடம்பெற வருகை தந்த குழு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கனிய மணல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக குறித்த ஒரு நிறுவனம் ஆய்வினை மேற்கொள்ள வந்ததாக தகவல் கிடைத்திருந்தது.

இது தொடர்பாக உடனடியாக குறித்த அமைச்சுக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், சபை முதல்வர் விமல் ரத்நாயக்கா அவர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்து உடனடியாக அந்த செயற்பாட்டை நிறுவதற்குரிய பணிப்புரை விடுத்திருந்தோம்.

மன்னார் மாவட்ட செயலாளரிடம் இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டது.

அந்தவகையில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் கவனம் செலுத்தியுள்ளார்.

அவரும் இச் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு பணிப்புரை பிறப்பித்திருந்தார்.

நாங்கள் எமது அரசாங்கத்தில் மன்னார் மாவட்ட மக்களுடைய நலன் சார்ந்த வாழ்வியலை, பொருளாதாரத்தை பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு எந்த விதத்திலும் இடமளிக்கமாட்டோம்.
கடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இதனை நிறுத்துவதற்கான தீர்மானத்தை எடுத்திருந்தோம். அதற்கமைய இதனை தடுத்துள்ளோம்.

எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வண்ணம் எமது அரசாங்கம் செயற்படும். கடந்த கால அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்படும்.

இது தொடர்பில் மக்கள் பயம் கொள்ள தேவையில்லை. இது மக்களுக்கான அரசாங்கம். மக்களுக்காகவே செயற்படும் எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply