
பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பல்வேறு அரச நிறுவனங்களில் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றமை தெளிவாக தெரிகிறது. குறிப்பாக பொலிஸார் இதற்கு உதவிகளை வழங்குகின்றனர். இதுகுறித்து நான் தீவிர அவதானம் செலுத்திள்ளேன். எந்தவொரு விதத்திலும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட நாம் இடமளிக்க மாட்டோம்.
இந்த செயல்பாடுகளை பாதாள உலக குழுக்களின் குற்றங்களாகவே நாம் அடையாளம் காண்கிறோம். பாதாள உலகக் குழுக்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அனைத்து விடயங்களையும் நாம் கூற முடியாது. சில அரசியல்வாதிகளுக்கு இந்தச் செயல்பாடுகளுடன் தொடர்ப்புகள் இருக்கின்றன.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், பாதாள உலகக் குழுக்களை முற்றாக அழிக்கும் நடவடடிக்களும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.