கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- வெளியான காரணம்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன.

அதன்படி கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணமும் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதாள உலக உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.

கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கிலேயே கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலையைச் செய்த துப்பாக்கிதாரி அதே நாளில் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டார்.

அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வேனின் சாரதியும் இதன்போது கைது செய்யப்பட்டார்.

குறித்த வேனில் போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது ​​துப்பாக்கிதாரி, தானும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணும் கடந்த 17 ஆம் திகதி கடுவெலவில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

அங்கு ​​காரில் வந்த ஒருவர் துப்பாக்கிதாரிக்கும், குறித்த பெண்ணுக்கும் பொதி ஒன்றை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

துப்பாக்கிதாரி அணிந்திருந்த சட்டத்தரணி உடை உட்பட பல பொருட்கள் பொதியில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த அன்று காலையில் பொதியை கொடுத்த நபரால், துப்பாக்கிதாரியும் குறித்த பெண்ணும் ஹொண்டா ஃபிட்டில் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன்படி, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் துப்பாக்கிதாரிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் கைப்பற்றினர்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொழும்பு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply