
நூற்றுக்கணக்கான ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது விசாரணைகளை மேற்கொள்ளாமல் நிறுத்திவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (28) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சரத்துகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக நான் பணியாற்றிய வேளையில், எமக்கு 1200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 500 முறைப்பாடுகள் நிதி குற்ற புலனாய்வு பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு போன்றவற்றிற்கு அனுப்பின வைக்கப்பட்டன.
இருப்பினும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சில அரசியல் ஒப்பந்தங்களில் ஈடுபட்ட பின்னர் இவற்றில் பலவற்றை நிறுத்தினர்.
ஆனால் புதிய அரசாங்கம் இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை மீதான விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
நிதி குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பல்வேறு நபர்கள் வருமானம் ஈட்டிய பில்லியன் கணக்கான ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் எமது அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட 4.5 பில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களும், நிதி குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட 1.05 பில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களும் இன்றுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.