
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்றைய தினம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார்.
பின்னர் மாலை 6:30 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் அவரின் தங்குமிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.