
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்றைய தினம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டடு வருகின்றனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தொடங்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (12) பிற்பகல் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து அனுராதபுரம் வைத்தியசாலையின் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதால் மாத்திரம் இந்தப் போராட்டம் முடிவுக்கு வராது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர் சசிக விஜேநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் வைத்தியசாலைக்கு வந்து மேற்கொண்ட விசாரணைச் செயற்பாடுகள் வெற்றிகரமாக இருந்தபோதிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று அரசாங்கம் உத்தரவாதத்தை வழங்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பாதிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டதால் மட்டும் தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்படாது என்றும், நாளை (13) ஆளுநருடன் நடைபெறும் கலந்துரையாடலுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.