
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதியில் திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், அவரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்த கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் பிறிதொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து விடுதலை பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பின்னர் அவரது இரண்டு கையடக்க தொலைபேசிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார், மேலும் காணாமல் போன தொலைபேசியின் இருப்பிடம் குறித்து கிடைத்த சமிக்ஞைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, அவுகன ரயில் நிலையம் அருகே கையடக்க தொலைபேசி சமிக்ஞைகள் இல்லாததால், அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கல்னேவ பொலிஸ் விசேட குழுவினர் கல்னேவ, எலபதுகம பகுதியில் மறைந்திருந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.