ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அந்த மாவட்டங்களில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிவரை நாளாந்தம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் படி முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் குறுகிய கால விடுமுறைகள் என்பன மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்;டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மூன்று இடங்களில் 7 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் இதனை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கடற்படை அதிகாரியுடன்; நெருங்கிய தொடர்பை பேணிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாரதி அலுவலக பணியின் நிமித்தம் மன்னாருக்கு சென்றுள்ள நிலையிலேயே அவர்கள் இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொதுசுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு மேலதிக வாகனங்களை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா ஒழிப்பு தொடர்பான விசேட நடவடிக்கைகள் அலுவலகத்தின் குழு இன்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் ஒன்று கூடியபோது இந்த தீர்மானத்தை மேற்கொண்டது.

தற்போது நாட்டில் கொரோனா பரவல் வேகம்காட்டி வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மேலதிக வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்ற முறைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir