பிரவுன் மற்றும் வெள்ளைச் சீனியைக் கலந்து விற்பனை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடியான செயற்பாடுகளில் சில பல்பொருள் அங்காடிகள் ஈடுபடுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, முட்டை விவகாரத்தில் கவனம் செலுத்தியது போல, ஏனைய நுகர்வுப்பொருள்கள் மீதும் அதிக கவனம் செலுத்துமாறு வர்த்தக அமைச்சரிடம் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கறுப்புச் சந்தையும், மோசடி வியாபாரிகளும் அப்பாவி நுகர்வோரை தொடர்ந்தும் தவறாக கையாண்டால், மக்களுக்குச் சலுகைகள் வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை, என்றும் சம்பத் கூறினார்.
“ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் சில்லறை விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோ பிரவுண் சீனி 360 ரூபாவாகவும் உள்ளது.
வெள்ளைச் சீனியுடன் பிரவுண் சீனியைக் கலந்து, பிரவுண் சீனியாக அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம், சில பல்பொருள் அங்காடிகள், ஒரு கிலோவுக்கு 140 ரூபா இலாபத்தினைச் சம்பாதிக்கின்றன.
பிரவுண் சீனி, வெள்ளை ரகத்தை விடச் சிறந்தது எனக் கருதப்படுவதால், சந்தையில் உள்ள வெள்ளைச் சீனியைவிட பிரவுண் சீனியை மக்கள் அதிகம் வாங்க விரும்புகிறார்கள் என்றும் சம்பத் குறிப்பிட்டார்.
நுகர்வோர் பொதுவாக தங்கள் பொருட்களின் தரம் காரணமாக பல்பொருள் அங்காடிகளை ஆதரிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
பல்பொருள் அங்காடிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்ற இதுபோன்ற செயல்களை நாடினால், தாங்கள் ஒவ்வொரு பல்பொருள் அங்காடிகளின் முன்பும் கூடி, இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிவரும் என்றும் அசேல சம்பத் தெரிவித்திருக்கிறார்.
