21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எமது கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டிய தருணம் இது என்றும், கல்வித்துறையில் பல முன்னேற்றங்களை அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மே 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘Sri Lanka Skills Expo 2023’ என்ற நிகழ்வுக்கான ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை தற்போது நான்காவது தொழில்துறைப் புரட்சியில் உள்ளது, என்றும் மிக விரைவில் ஐந்தாவது தொழில் புரட்சியில் அடியெடுத்து வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், நான்காவது தொழில் புரட்சியில்கூடச் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோமா? என்பது பிரச்சினையாக உள்ளது என குறித்த ஊடக நிகழ்வின்போது அவர் கேள்வியொன்றையும் எழுப்பியிருந்தார்.
நாங்கள் முதல் தொழில்துறைப் புரட்சியைத் தவறவிட்டோம்; இரண்டாவது மற்றும் மூன்றாவது புரட்சியையும் தவறவிட்டுவிட்டோம் என்றும், இப்போது நான்காவது தொழில் புரட்சியை இழக்கப் போகிறோம். அதனால்தான் நமது இளைய தலைமுறையினர் நமது கல்வி முறையை மாற்றவில்லை என்று அரசியல் தலைவர்கள் உட்படப் பலர் கடந்த காலத்தைக் குற்றஞ்ட்டுகிறார்கள். கல்வி முறை மூலமே மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 75 ஆண்டுகளாக, நம் நாட்டில், சிறிய மாற்றங்களுடன் ஒரே மாதிரியான கல்வி முறையை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 1961 இல், தனியார் பள்ளிகளைப் பொதுத்துறைக்குக் கொண்டுவரும் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, இன்று 10,145 அரசுப் பாடசாலைகள் உள்ளன. நாட்டில் அரசு உதவி பெறும் மற்றும் முழுமையாகத் தனியார் மயமான பாடசாலைகள் உள்ளன. தற்போது, எங்களிடம் முந்நூறுக்கும் மேற்பட்ட சர்வதேசப் பாடசாலைகளும் உள்ளன, என்றும் அமைச்சர் கூறினார்.
சர்வதேசப் பாடசாலைகள் மீது கல்வி அமைச்சுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால், மிக விரைவில் அமைச்சகம் அது குறித்த ஒழுங்குபடுத்தலை அறிமுகப்படுத்த உள்ளது. இதுதான் நமது நாட்டின் கட்டமைப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
1946 இல் சுதந்திரக் கல்வி கட்டமைக்கப்பட்டபோது, திறன் என்பது அதன் தூண்களில் ஒன்றாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கடந்த 75 ஆண்டுகளாகத், திறன் துறைக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கையும் எம்மிடம் உள்ளது. மே மாதத்திற்குள் கல்வி அமைச்சகம் தகவல் தொழில்நுட்பத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்க உள்ளது. ஆறாம் வகுப்பில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதே அமைச்சகத்தின் குறிக்கோள் ஆகும் எனவும், மேலும் மூன்று ஆண்டுகளுக்குள் மாணவர்கள் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை முடிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே நாங்கள் மைக்ரோசொப்ட் கோர்ப்பரேஷன், கொம்ப்யூட்டர் அசோசியேஷன் மற்றும் தனியார் துறையில் உள்ள ஏனைய தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். அதற்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஆதரவு எமக்குத் தேவை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
T01
