மாதம் 200,000 ஐ ஊதியமாகப் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்கள் மாதாந்த வரியாக 1700 ரூபாவைச் செலுத்தவேண்டும் எனவும், தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு விலைக் குறைப்பிலிருந்து குறித்த ஊழியர்களது சேமிப்பு 5800 ஆகும் எனவும், அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்திருக்கிறார்.
2001 முதல் 2007 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் வர்த்தக இடைவெளி 25.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதுடன், அரசாங்கத்தின் டொலர் மற்றும் ரூபாக் கணக்கை மேம்படுத்துவதன் மூலம் 2028 ஆம் ஆண்டளவில் இதனை நிர்வகிக்கக்கூடிய நிலைக்குக் குறைக்க சர்வதேச நாணய நிதியம் விரும்புவதாகப் பந்துல குணவர்தன கூறினார்.
பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களின் செலுத்தும் வரி உயர்வு மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை (SOEs) விலக்குவது, மாநில வருவாயை தற்போதைய 8% இலிருந்து 20% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும், பொருளாதார மீட்சியுடன் அதன் பலன் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனவும் பந்துல குணவர்த்தன கூறியிருந்தார்.
வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன, “வரி அதிகரிப்பு மற்றும் SOE களை விலக்குவதன் மூலம் அரச வருவாயை உயர்த்துவதற்கு IMF க்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது. மேலும், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் (EFF) பெறுவதற்காக இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது“ என்று தெரிவித்தார்.
இலங்கையானது, ஒப்பந்தத்தை மதிக்கத் தவறினால், IMF இன் இரண்டாவது தவணையை நாங்கள் பெறமாட்டோம் எனவும், இருப்பினும், பொருளாதார மீட்சியின் முதல் நிகழ்வில் தற்போதைய வரி வீதத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது எனவும் பந்துல குறிப்பிட்டிருந்தார்.
ஊடகவியலாளர் ஒருவரின் வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர் குணவர்த்தன, உலகச் சந்தையில் எரிவாயு மற்றும் எண்ணெய் விலைக் குறைப்பின் நன்மைகளை அரசாங்கம் நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றார்.
12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1005 ஆலும், ஒரு லீற்றர் டீசல் ரூபா. 80 ஆலும், சூப்பர் டீசல் ரூபா. 45 ஆலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ரூபா. 135 ஆலும், ஒக்டேன் 92 ரூபா. 60 மற்றும் மண்ணெண்ணெய் ரூபா. 10 ஆலும் விலைக் குறைப்புச் செய்தமையானது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பதோடு நுகர்வுப் பொருள்களின் விலைகளை ஏராளமாகக் குறைப்பதற்குப் பங்களிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
T01
