2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் அன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் நான்காம் ஆண்டு நினைவாகக் கொச்சிக்கடைப் புனித அந்தோனியார் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நேற்றுக் காலை 8.45 மணியளவில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், இலங்கையில் உள்ள கத்தோலிக்கச் திருச்சபையானது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற மிருகத்தனமான படுகொலைகளுக்குப் பின்னால் உள்ள நீண்டகால உண்மையைக் கண்டறியும் பாதிக்கப்பட்டவர்களின் தேடலுக்காக, “நீதி கிடைக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்ற தொனிப்பொருளில் மனிதச் சங்கிலியையும் உருவாக்கியிருந்தது.
குறித்த மனிதச் சங்கிலியானது, கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கொச்சிக்கடைப் புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம்வரை அமைக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 21, 2019 அன்று, கொச்சிக்கடைப் புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்போது தடை செய்யப்பட்ட உள்ளூர் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான நஷனல் தவ்ஹீத் ஜமாத்தின் (NTJ) தற்கொலைத் தாக்குதல் குழுவினரின் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புக்களால் இலங்கை பேரழிவிற்குள்ளானது.
கட்டுவாப்பிட்டியில் உள்ள தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி மற்றும் ஷங்கிரிலா ஹோட்டல்கள் மற்றும் தெஹிவளையில் உள்ள விருந்தினர் விடுதி ஆகியவற்றில் இடம்பெற்ற குறித்த வெடிப்புக்களால் வெளிநாட்டவர்கள் உட்பட 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஏறக்குறைய 500 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
T01
