விமான நிலையத்தில் வழங்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கடமையில்லா கொடுப்பனவுகள் மே முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் எனவும், இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மனுஷ நாணயக்கார, நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது, கடமையில்லாக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அனுமதி கோரி அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்பின்னர், தொழிலாளர் அமைச்சகம் கடமையில்லாக் கொடுப்பனவு அதிகரிப்புத் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்தச் சுற்றறிக்கையின்படி, வங்கி வலையமைப்பின் ஊடாக சட்டப்பூர்வமாக இலங்கைக்குப் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அதிகரிக்கப்பட்ட கடமையற்ற கொடுப்பனவைப் பெறத் தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே முதலாம் திகதி முதல் வங்கி வலையமைப்பு மூலம் அனுப்பப்பட்ட பணத்தின் அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஐந்து வகைகளின் கீழ் இந்தச் சலுகை வழங்கப்படும்.
US$ 2400-4799 க்கு இடையில் பணம் அனுப்பிய தொழிலாளர்களுக்கு கூடுதல் வரியில்லா உதவித்தொகையாக US$ 600 உம் US$ 4,800 – US$ 7,199 வரை அனுப்பிய வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு US$ 960கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், US$ 7,200 – US$ 11,999 வரை அனுப்பிய தொழிலாளர்கள் கூடுதல் வரியில்லா உதவித்தொகையாக US$ 1,440 பெறுவார்கள் எனவும், US$ 12,000 – US$ 23,999 வரை பணம் அனுப்பிய வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் US$ 2,400 பெறலாம் எனவும், US$ 24,000 அல்லது அதற்கு மேல்அனுப்பிய தொழிலாளர்கள் கூடுதல் தொகையாக, US$ 4,800 ஆகவும் வரியில்லா உதவித்தொகையைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,கடந்த வாரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, தொழிலாளர்கள் இரண்டு மில்லியன் ரூபாய் வரை கடன் வசதிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அமைச்சரவையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்ததுடன், வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பிய தொழிலாளர்களுக்கு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.
T01
