யூடியூப் மற்றும் அரசியல் வலைப்பதிவாளர் தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மே 24 ஆம் திகதி வரை நீட்டிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸ்ட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒருவரை அவமதிக்கும் வகையில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்ததால் ஹந்துங்கொடவுக்கு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதி தர்ஷன ஹந்துங்கொட சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்கும் நோக்கில் தனது கட்சிக்காரர், குறித்த அறிக்கையை வெளியிட்டதாக நீதிமன்றில் தெரிவித்ததுடன் ஜனாதிபதி சட்டத்தரணி இந்த விடயம் தொடர்பான சாட்சியங்களை முன்வைப்பதற்கான காலவரையறையினை வழங்குமாறும் நீதிபதியிடம் கோரினார்.
இதன்படி, வழக்கை இம்மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, குறித்த திகதி வரை பிரதிவாதிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டத் தடை உத்தரவை நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸ்ட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஆகியோரின் முறைப்பாடுகளைப் பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
T02
