NSAID (Non-steroidal anti-inflammatory drugs) வகை மருந்துகளை பயன்படுத்துவதால் டெங்கு தொடர்பான பல மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் (HPB) தெரிவித்துள்ளது.
காய்ச்சல், உடல் வலி மற்றும் தலைவலி போன்றவற்றிற்கான சிகிச்சையாக மக்கள் இந்த வகையான வலி நிவாரணிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை முழுவதும், மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இந்தவகையான மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய மருந்துகள் நல்ல வலி நிவாரணிகளாக இருந்தாலும், டெங்கு நோய்த்தொற்றுக்கு அவற்றைப் பயன்படுத்துவதால் சிக்கல்கள் மற்றும் மரணம் கூட சம்பவிக்கலாம் என்றும் குறித்த பணியகத்தின் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த நாட்களில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால், அவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் எனவும், ஏராளமான நீர்ப் பதார்த்தங்களை உட்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், சரியான மருந்தான பரசிற்றமோல் (Paracetamol) ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மக்கள் உடனடியாக மருத்துவரை நாடவும், அவரின் ஆலோசனையின்றி எதுவித மருந்துகளையும் அணுகவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
T01
