புழக்கத்தில் உள்ள 2000 ரூபா நோட்டுக்களை திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
முதல் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபா நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யலாம் எனவும் அல்லது எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் குறித்த அறிவிப்பு தெரிவிக்கின்றது.
அத்துடன், தினமும் 20,000 ரூபா மதிப்புள்ள 2000 ரூபா நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 மற்றும் 1000 ரூபா நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு திடீரென அறிவித்தது. அத்துடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகம் செய்திருந்தது.
ரூபா நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. பிரதமர் மோடியின் இந்தத் தவறான கொள்கைகளால்தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர், 2018-19 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபா நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு 2,000 ரூபா நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளமை இந்திய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுள்ளது.
கடந்த, 2016 ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளின் முன் பல மணி நேரம் காத்து நின்றனர். அதுபோன்ற ஒரு சூழ்நிலையை மத்திய அரசு தற்போதும் ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.