விவசாய நவீனமயப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டதுடன் இணைந்து செயற்படும் ஜனாதிபதி செயலகம், விவசாய அமைச்சு உட்பட ஏனைய அமைச்சுக்களின் மேலதிகச் செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான தரங்களில் இருக்கின்ற அதிகாரிகளை மேற்படி அலுவலகத்திற்காக பெயரிடுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவுறுத்தியதோடு இந்த வேலைத்திட்டத்திற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், முப்படையினரையும் உள்வாங்கி மேற்படி நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.

தேயிலை, தெங்கு, இறப்பர், நெல், கறுவா, மீன்பிடி போன்ற துறைகளில் துறைசார் ஆய்வுச் செயற்பாடுகளை அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து மேற்கொண்டு விவசாய நவீனமயப்படுத்தல் செயலகத்தின் வேலைத்திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

விவசாய நவீனமயப்படுத்தல் செயலகத்தின் செயலாற்றுகை முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கையொன்றை ஜூலை மாதம் தன்னிடத்தில் கையளிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply