சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் முறையான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஜூலை முதலாம் திகதி முதல் அரசினால் செயற்படுத்தப்படவுள்ள அஸ்வெசுமா நலத்திட்டம் தொடர்பிலும் குழுக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆகிய நான்கு சமூகப் பிரிவுகளின் கீழ் நலன்புரிப் பலன்கள் வழங்கப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கும் குறித்த கொடுப்பனவுகள் வழமைபோல் வழங்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இக்கொடுப்பனவுக்காக 3.7 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உண்மையான தேவையுடையவர்களுக்கு ஜூலை முதலாம் திகதி முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமுர்த்திக் கொடுப்பனவைப் பெறுபவர்களில் 30 வீதமானவர்கள் அதற்குத் தகுதியற்றவர்கள் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவு செய்ய வேண்டுமெனவும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
அவ்வாறே, காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளை அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் குழுக் கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, சுங்கத் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் நிதியமைச்சு என்பன கடந்த வாரம் இடம்பெற்ற குழுக்கூட்டத்தில் உத்தரவிடப்பட்ட திகதியில் உரிய அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
பாராளுமன்றக் குழுவினால் அழைப்பு விடுக்கப்படும்போது குறித்த காலப்பகுதிக்குள் உரிய அறிக்கைகள் மற்றும் கருத்துக்களைச் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குழுவின் தலைவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
T01