உலக உயர் குருதி அழுத்த கழகத்தால், இந்த மாதம் உயர் குருதி அழுத்த விழிப்புணர்வு மாதமாகவும், கடந்த 17 ஆம் திகதி உலக உயர் குருதி அழுத்த தினமாகவும்; கொண்டாடப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில், நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவ நிபுணத்துவ அமைப்புகளால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதனடிப்படையில், பேராதனை உயர் குருதி அழுத்த ஆராய்ச்சி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ பீடங்களுக்கு இடையிலான வினாடிவினாப் போட்டி கடந்த 28 ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கொழும்பு, பேராதனை, யாழ்ப்பாணம், ரஜரட்டை, கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழக மருத்துவ பீடங்களின் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களின் குழுக்கள் குறித்த போட்டியில் கலந்துகொண்டன.
இறுதிப்போட்டிக்குத் தெரிவாகிய யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் அடங்கிய அணி 2023 ஆம் ஆண்டிற்கான வினாடி வினாப் போட்டியின் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர் குழுவில் சஹானா உமாசங்கர், ராஜபக்ஷ பத்திரனாலாகே, இஷானி பிரபோதனி ராஜபக்ஷ, உதயகுமார் ஜதுஷன், நவரத்னராஜா துளசிஹான், தேனுகா உருத்திரமூர்த்தி ஆகியோர் உள்ளடங்கினர்.
மேற்படி மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் தேவையான வசதிகளையும் பேராசிரியர்.இரா. சுரேந்திரகுமாரன், பேராசிரியர்.தி.குமணன், பேராசிரியர்.ந.சுகந்தன்,வைத்திய கலாநிதி வா.சுயனிதா மற்றும் வைத்திய கலாநிதி பிரம்மா தங்கராஜா ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
