பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பிஎன்எஸ் ‘ஷாஜஹான்’ எனும் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது என ஸ்ரீலங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் பிரவேசித்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பலை ஸ்ரீலங்கா கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர்.
நேற்றைய தினம் ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் பிரவேசித்த குறித்த போர்க்கப்பல் இரண்டு நாட்களுக்கு ஸ்ரீலங்கா கடற்பரப்பில் நங்கூரமிட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நங்கூரமிட்டிருக்கும் இரண்டு நாட்களும், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில் கப்பலில் பயணிப்பவர்கள் நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘ஷாஜஹான்’ போர்க்கப்பல் நாளைய தினம் ஜூன் 04 ஆம் திகதி ஸ்ரீலங்காவிலிருந்து இருந்து புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎன்எஸ் ‘ஷாஜஹான்’ என்ற இந்த போர்க்கப்பல் 134 மீட்டர் நீளமுள்ளதும் 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலின் தலைவராக அட்னான் லகாரி டிஐ தலைமை தாங்குகிறார்.
இந்தநிலையில் அவர் ஸ்ரீலங்காவின் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.