இலங்கையில் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது என்பது கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தது என்று ஜப்பான் அறிவித்துள்ளது.
ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய மாலபேவை கொழும்பு கோட்டையுடன் இணைக்கும் இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் இதனை கூறியுள்ளது.
நல்லாட்சிக் காலத்தில் ஜப்பானின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலகு தொடருந்து திட்டத்தினை மீள ஆரம்பிக்க இலங்கை அமைச்சரவை இந்த வாரம் அனுமதி வழங்கியுள்ளது.
2020 செப்டம்பரில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இரத்து செய்த இத் திட்டத்தை அண்மையில் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீள ஆரம்பிக்கும் விருப்பத்தை வெளியிட்டார்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜப்பானிய தூதரகம், கடனைத் தொடர்வது இலங்கைக்கு முக்கியமானது இருப்பினும், அனைத்து கடன் வழங்குநர்களுடனும் ஒரு வெளிப்படையான, சமமான முறையில் மறுசீரமைப்பு செயல்முறை அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.
எனவே கடன் மறுசீரமைப்பைக் கவனித்து, கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் புதிய கடன் திட்டங்களை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதை ஜப்பான் ஆராயும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.