தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு காவல்நிலையத்தில் முன்னிலையாகும், வரை கஜேந்திரகுமாருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மருதங்கேணி காவல்துறையினர் நீதிமன்றை கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த கோரிக்கையை பரிசீலித்த கிளிநொச்சி நீதிவான், பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.
கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றிருந்த கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் குறித்த உத்தரவை கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மருதங்கேணி காவல் நிலையத்தில் இன்று (06) முன்னிலையாகுமாறு முன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பான இந்த அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.