சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்ப்பது தொடர்பில் சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வழக்கு காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு சமூக, மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் இந் நிலைமையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் குழு தீர்மானித்தது.
சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துகோரள தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில்,
2015 முதல் 2020 வரை நடைபெற்ற சிறுவர், பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இதுவரை இறுதி தீர்மானம் எட்டமுடியாமல் போன விடயங்கள் குறித்து மீளவும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குழு தீர்மானித்தது.
மேலும், பாடசாலை பாடநெறிகளில் சட்டம் ஒரு பாடமாக உள்ளடக்கப்பட வேண்டும், இவ் விவகாரத்தை கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தவும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.
வீட்டு வேலைகளுக்காக பெண்கள் வெளிநாடு செல்வதால் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைத்தாலும், இவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் மறைமுகமாக அரசுக்கு ஏற்படும் செலவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு,
பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பாமல், தொழில்சார் பயிற்சி அளித்து, அவர்களை சிறந்த தொழில் துறைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டப்பூர்வ பிரச்சினைகள் மற்றும் தூதரகங்களில் உள்ள முறைகேடுகள் காரணமாக உரிய முறையில் தீர்வு காணப்படாத வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினைகளை ஒழுங்குபடுத்த ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
சில நாடுகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நிலையங்கள் இன்மையினால் இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதற்கும் குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தன.