நாமலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனையோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டாகோகம’ போராட்டத் தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை, எதிர்வரும் 2023 ஜூலை 19 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான், திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID), நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

எனவே, அந்த மனு மீதான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், குறித்த வழக்கை வேறொரு திகதியில் மீளப்பெறுமாறு நீதவானிடம் கோரியிருந்தனர்.

அதன்படி, வழக்கை ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த வழக்கில் சந்தேகநபர்களான, பெயரிடப்படாத பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply