வெள்ளை வான் விவகாரம் தொடர்பிலான வழக்கின் சாட்சியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கின் முதல் சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ள சரத் குமார என்ற நபர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு பிரச்சினை காரணமாகவே தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதன் போது, சாட்சி நீதிமன்றத்திற்கு வருவதற்கு எவ்வகையான பாதுகாப்பு எதிர்பார்க்கப்படுகிறது என நீதிபதி கேள்வியெழுப்பியிந்தார்.
அதற்கு சட்டத்தரணி தெளிவான பதில் அளிக்கத்தவறியதன் காரணமாக சட்டத்தரணியால், முன்வைக்கப்பட்ட விடயங்களில் திருப்தி அடைய முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
பின்னர் சம்பந்தப்பட்ட சாட்சியை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.
அதனையடுத்து, அரச சட்டத்தரணியிடம் பேசிய நீதிபதி, இந்த வழக்கை தொடர்ந்து அழைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிகிறது, எனவே, முதல் சாட்சி இல்லாமல் இந்த வழக்கை தொடர்வது குறித்து ஆராயுமாறு அரச சட்டத்தரணிக்கு நீதிபதி அறிவித்தார்.
மேலும் குறித்த சந்தேக நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.