பூசகர்களிடையே முரண்பாடு – தடைப்பட்டது கொடியேற்றம்; நீதிமன்றின் உத்தரவு!

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாகவே, இன்று காலை இடம்பெறவிருந்த கொடியேற்ற நிகழ்வு தடைப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் முன்நின்று நடத்துவதென கமல்ராஜ் குருக்கள் மற்றும் சிவதர்சக்குருக்கள் ஆகிய இரண்டு பூசகர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு முற்றிய நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆறாம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றினால் சிவதர்சக் குருக்கள் என்பவர் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை முன்னின்று நடாத்துமாறும் ஏனைய இரு பூசகர் குடும்பத்தினரும் திருவிழாவை குழப்பக்கூடாது என கட்டளை வழங்கப்பட்டது.

எனினும் கமல்ராஐ் குருக்கள் ஆலயத்தினை பூட்டிவிட்டு  திறப்பினை எடுத்துச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, பொலிஸார் நீ்திமன்றக் கட்டளையின் பிரகாரம் அவரிடமிருந்து திறப்பினை பெற்று உரிய பூசகரான சிவதர்சக் குருக்களிடம் வழங்க முற்பட்டபோது கமல்ராஜ் குருக்கள் திறப்பை எடுக்கொண்டு கொழும்பு சென்றுவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பின்னர் நேற்றைய தினம் 9.45 மணியளவில் கமல்ராஜ் குருக்கள் ஆலயத்தில் பிரசன்னமாகியபோதும் ஆலயத் திறப்பினை உரிய பூசகரிடம் வழங்கவில்லை.

அதனால் வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில் காவல்துறையினர் ஆலயத்தினை பூட்டிவிட்டு, நாளை நீதிமன்றில் ஒப்படைப்பதாகவும் அங்கு உரிய ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளுமாறும் ஆலயத் திறப்பினை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையிலேயே, குறித்த வழக்கு நீதிமன்றில் இன்று மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீன்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply