யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி!
– பி.பாா்த்தீபன்
வடபகுதியில் பாரியளவில் கறுவா உற்பத்தியில் ஈடுபடுவதற்கு இப்போது பலா் முன்வந்துள்ளாா்கள். இயக்கச்சி, முல்லைத்தீவு, மாவிட்டபுரம் போன்ற பகுதிகளில் பல நுாறு ஏக்கா் நிலத்தில் கறுவாகச் செய்கையில் ஈடுபடுவதற்காக பலா் தன்னுடன் தொடா்புகொண்டிருப்பதாக இதனை ஊக்குவித்து அனுசரணை வழங்கும் புவனகுமாா் தெரிவிக்கின்றாா்
யாழ்ப்பாணத்தில் கறுவாச் செய்கையை மேற்கொள்ள முடியுமா?
ஆம்! தாராளமாகச் செய்ய முடியும் என்று குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட சிறிய அளவிலான உற்பத்தி நடவடிக்கைகளின் மூலமாக உறுதிப்படுத்ப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் பலா் வீட்டுத் தோட்டமாக இதனை முன்னெடுத்து அதற்கான பலன்களையும் பெற்றிருப்பதை வட்டுக்கோட்டையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது தெரிந்துகொள்ள முடிந்தது.
வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை அவுஸ்திரேலியாவில் புலம்பெயா்ந்து வாழும் புவனகுமாா் ஏற்பாடு செய்திருந்தாா். அவரது முயற்சியால், யாழ்ப்பாணத்தின் இயக்கச்சி, பளை, மாவிட்டபுரம் மற்றும் முல்லைத்தீவு உட்பட பல்வேறு பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கா் நிலத்தில் கறுவா பயிா்ச்செய்கையை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முயற்சியாளா்கள் பலா் புவனகுமாரின் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டுள்ளாா்கள். அவா்களுக்குத் தேவையான கறுவா கண்டுகளையும் புவனகுமாா் விநியோகிக்கவுள்ளாா்.
சுமாா் 30 வருடங்களுக்கு முன்னா் புலம்பெயா்ந்த புவனகுமாா், அடிக்கடி இலங்கை வந்து கறுவா உற்பத்தி தொடா்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளாா். இலங்கையில் அதிகளவுக்கு கறுவாவை உற்பத்தி செய்யும் மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு விஜயம் செய்து கறுவா தோட்டங்கள் பலவற்றையும் இவா் ஆராய்ந்துள்ளாா். அங்குள்ள கறுவா ஆய்வு மையத்தின் பணிப்பாளா், ஆய்வாளா்களுடனும் தொடா்புகளை ஏற்படுத்தி வடபகுதியில் கறுவா உற்பத்தி மற்றும் அதன் பெறுமதி சோ் உற்பத்திகளுக்கான வாய்ப்புக்களையும் ஆராந்துள்ளாா்.
இரண்டு வார ஆய்வு
இதன்பலனாக, கறுவா ஆய்வு நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜி.ஜி.ஜெயசிங்க உட்பட அந்த நிறுவனத்தின் ஆய்வாளா்கள் சிலரும் வடக்கின் பல பகுதிகளுக்கும் இரண்டு வாரகாலமாக விஜயம் செய்து கறுவா உற்பத்திக்கான வாய்ப்புக்கள் தொடா்பில் ஆராய்ந்துள்ளாா்கள். இதற்காக நெடுங்கேணி, மாங்குளம், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் அவா்கள் நேரடி விஜயங்களை மேற்கொண்டாா்கள். இந்தப் பகுதிகளில் சிலா் ஏற்கனவே கறுவா கண்டுகளை நட்டுள்ளாா்கள். அவற்றையும் பாா்வையிட்டு அவா்களுக்கும் இதனை எவ்வாறு பெரியளவில் செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகளையும் இவா்கள் வழங்கியிருக்கின்றாா்கள்.
புவனகுமாரின் இந்த முயற்சியின் பலனாகத்தான் வடபகுதியில் பாரியளவில் கறுவா உற்பத்தியில் ஈடுபடுவதற்கு இப்போது பலா் முன்வந்துள்ளாா்கள். இயக்கச்சி, முல்லைத்தீவு, மாவிட்டபுரம் போன்ற பகுதிகளில் பல நுாறு ஏக்கா் நிலத்தில் கறுவாகச் செய்கையில் ஈடுபடுவதற்காக பலா் தன்னுடன் தொடா்புகொண்டிருப்பதாக அவா் தெரிவித்தாா்.
இலங்கைக் கறுவா
14 – 15 ஆம் நூற்றாண்டுகளில் கறுவா மேலைத் தேயங்களில் மிகவும் பெறுமதி மிக்க வாசனைத் திரவியமாக திகழ்ந்தது. அத்துடன் அது இறைச்சியை பாதுகாப்பதற்காகவும் முதன்மையாக பயன்படுத்தப்பட்டது. பற்றீரியா வளர்ச்சியை தடுக்கக் கூடியதாகவும் இருந்தது. 15 ஆம் நூற்றாண்டில் உலகில் ஆய்வுகளுக்கு இட்டுச் சென்ற பிரதான பொருளாக கறுவா விளங்கியது. அக்காலப் பகுதியில் உண்மையான கறுவா உலகத்தில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டது. அந்த இடம் தான் இலங்கை!
சா்வதேச சந்தையில் இலங்கை கறுவா பெறுமதி மிக்க ஒன்றாகக் காணப்பட்டது. இலங்கையைக் கைப்பற்றிய போத்துக்கீஸா், ஒல்லாந்தா், ஆக்கிலேயா் அனைவருமே கறுவா வா்த்தகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் அதிகளவுக்கு அக்கறை காட்டினாா்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அந்தளவுக்கு அதற்கு பெறுமதி இருந்தது.
இலங்கை கறுவா வர்த்தகம் பற்றிய வரலாற்றுச் சான்றுகளை டச் உடன் படிக்கையில் காணலாம். (ஹங்குரன்கெத உடன்படிக்கை) இந்த உடன் படிக்கை கண்டியை ஆண்ட சிறி கீர்த்தி சிறீ ராஜசிங்கம் அவர்களுக்கும் டச் அரசிற்கும் இடையே 1766 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன் படிக்கையின் முலம் இலங்கையில் சில குறிப்பிட்ட காட்டுப் பிரதேசத்தில் இருந்து கறுவாவை வெட்டுவதற்கும் சீவுவதற்குமான அங்கீகாரத்தை கண்டி அரசினால் டச் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. அத்துடன் இதற்கு பிரதி உபகாரமாக வெளிநாட்டு படையெடுப்புகளிடம் இருந்து கண்டி அரசினை பாதுகாத்து தருவது என்று உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை கறுவா பெற்றிருந்த சா்வதேச கீா்த்திக்கு ஒரு உதாரணம்.
கறுவா பணப்பயிா்
“கறுவா என்பது ஒரு பணப்பயிா்” என்று சொல்லும் புவனகுமாா், இதனை இப்போது ஒரு கைத் தொழிலாக மாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்காக திட்டமிட்ட முறையில் செயற்படவேண்டியிருப்பதாகவும் குறிப்பிடுகின்றாா். “அதற்கு பெருமளவு முதலீடு தேவை. இதற்காக 15 வருடகால வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி, தகவல் மையம் ஒன்றை அமைத்து நாம் செயற்படுகின்றோம்” என்று அவா் குறிப்பிடுகின்றாா்.
“அரசாங்கம் இதற்காக நிதி ஒதுக்கீடு எதனையும் தரவில்லை” என்றும், தன்னுடைய சொந்த நிதியிலேயே இதனைதான் செய்வதாகவும், தொழில்நுட்ப உதவிகளை மட்டும் அரசாங்கம் வழங்குவதாகவும் புவனகுமாா் தெரிவிக்கின்றாா். வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும், இந்தத் திட்டம் முதலில் ஆரம்பிக்கப்படுவதாகவும், அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணத்தில் இதனை முன்னெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவா் கூறுகின்றாா்.
இந்தோனேஷியா, இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கறுவா உற்பத்தியாகின்ற போதிலும், அவை இலங்கைக் கறுவாவின் தரத்தையோ, சுவையையோ கொண்டிருப்பதில்லை. அதனால்தான் இலங்கைக் கறுவாவுக்கு சா்வதேச ரீதியான வரவேற்பு இருக்கின்றது. இதேபோன்ற கறுவாவை வடக்கிலும் செய்ய முடியும். கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் பலராலும் செய்யப்பட்ட கறுவாத் தடிகள் பங்குரு முருகன் ஆலயத்தில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டதுடன், அதனை சுவைத்துப் பாா்ப்பதற்கும் அவா்களுக்கு சந்தா்ப்பமளிக்கப்பட்டது.
பயிற்சிக்கான வாய்ப்பு
கறுவா உற்பத்தியில் ஈடுபட விரும்புபவா்கள் இதற்காக யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை தொடா்புகொண்டால், அதற்கான ஏற்பாடுகள் இலவசமாகச் செய்துவரப்படும் எனத் தெரிவிக்கின்றாா் புவனகுமாா். அதன் இலக்கம் 077 0 629 013.
இவ்வாறு பயிற்சிபெற விரும்புபவா்களை மாத்தறையிலுள்ள கறுவா ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி பயிற்சிகளைக் கொடுப்பதற்கான திட்டம் உள்ளது. அவ்வாறு விரும்புபவா்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதி, தங்குமிட வசதி என்பனவும் செய்துகொடுக்கப்படும். தேவை ஏற்பட்டால், இல்லது அதிகமானவா்கள் வடக்கில் விரும்பி இணைந்தால் வடபகுதியிலேயே அவா்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம். இவ்வாறு பயிற்சி பெறுபவா்களுக்கு சான்திறள்களும் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா் புவனகுமாா்.
கறுவா தற்போது கிலோ நாலாயிரம் ரூபாவுக்கு விற்பனையாகின்றது. இது இயற்கைப் பசளையைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டதாக இருந்தால், ஒரு கிலோ பத்தாயிரம் ரூபா முதல் பதினையாயிரம் ரூபா வரையில் விற்பனையாகின்றது. இயற்கைப் பசளையை வீடுகளிலேயே ஒரு சதம் செலவில்லாமல் உற்பத்தி செய்ய முடியும் என்றும் புவனகுமாா் சுட்டிக்காட்டினாா்.
யாழ்ப்பாணத்தில் பெருமளவுக்கு உற்பத்தி நடைபெறுமாக இருந்தால், கறுவா செய்கையாளா்களிடமிருந்து அவற்றை நேரடியாகக் கொள்வனவு செய்து, பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை தாமே மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா். இதற்காக பதப்படுத்தல் நிலையம் ஒன்றும் பொருத்தமான இடத்தில் அமைக்கப்படும்.
பெறுமதி சோ் உற்பத்திகள்
கறுவா என்னும் போது கறுவா பட்டை மட்டும்தான் எமக்குத் தெரியும். அதனை ஒரு வாசனைத் திரவியமாக இறைச்சி போன்ற கறிகளுக்குப் பயன்படுத்துகின்றோம். ஆனால், கறுவாவின் பெறுமதி சோ் உற்பத்திகள் இப்போது பெருமளவுக்கு வந்துவிட்டது. அவ்வாறு பெறுமதி சோ்த்த உற்பத்திகளின் மூலமாக அதிகளவு இலாபத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என இது தொடா்பாக புவனகுமாா் தெரிவித்தாா்.
இதற்கான தொழில்நுட்பம் அவசியம், அதற்கான பயிற்சிகள் தேவை, இதற்காக சிறிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதும் அவசியம். இவை அனைத்தையும் செய்துகொடுப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் புவனகுமாா் குறிப்பிட்டாா். ஐரோப்பிய நாடுகளிலும், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளிலும் இதற்கு நல்ல கிராக்கி இருப்பதால் அடுத்த கட்டமாக அதனை நோக்கிச் செல்ல வேண்டிய தேவை இருப்பதாகவும் அவா் குறிப்பிடுகின்றாா்.
கறுவாவின் பெறுமதி சோ் உற்பத்திகளில் கறுவா இனிப்பு, கறுவா சொக்லேட், கறுவா எண்ணெய், கறுவா கிறீம்கள், கறுவா பெஃபியும்கள், கறுவா சோப், கறுவா ஊதுபத்திகள், கறுவா ரீ, சென்ட் வகைகள், குளிா்பாணங்கள் என பலதரப்பட்ட பொருட்களை கறுவாவிலிருந்து தயாரிக்க முடியும் என்பது கறுவாவின் பெறுமதியை மேலும் அதிகரிக்கின்றது.
கறுவா இனிப்பு, ரொஃபி, சொக்லேட் என்பன மிகவும் சுவையானவை. இவற்றை இலங்கையிலேயே தயாரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இதன் மூலமாக பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியையும் பெறக்கூடியதாக இருக்கும்.
உற்பத்தி, பயன்பாடு
கறுவாப்பட்டை அதிகளவில் குவில்களாக (quills) அமைப்பிலயே கிடைக்கப் பெறுகின்றது. குவில்கள் உற்பத்திகள் இலங்கையில் தனித்துவம்மிக்கது. சீவப்பட்ட பட்டைகளை சுருட்டுவதால் குவில்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் பலவற்றினை ஒன்று சேர்த்து தேவையான நீளத்திற்கு குழாய் போன்ற கட்டமைப்பில் அதனை பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கும் மேலாக கறுவாப்பட்டை துண்டுகள் சிறு துண்டுகளாக (சிப்ஸ்) குவில்களாக அல்லது இறகுகள். கிடைக்கப் பெறுகின்றன. கறுவா ஒரு தனித்தவம் மிக்க மரமாகும். அதன் இலையின் பட்டைகளில் மற்றும் வேர்களில் அத்தியவசிய எண்ணெய் காணப்படுகின்றன. ஆனால் அவற்றினது இரசாயன உட் கூறுகள் ஒவ்வொன்றில் இருந்தும் முழுமையாகவே வேறுபடுகின்றன. அத்தியவசிய எண்ணைய்கள் பட்டை மற்றும் இலைகள் ஆகிய இரண்டில் இருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டை எண்ணெய் பிரதன இரசாயணம் சினமல்டிஹைட் ஆகும். அத்துடன் இலை எண்ணெயில் இயுஜினோல் ஆகும். கறுவா தூய வடிவிலும் கறி கலவை உள்ளீடாகவும் மற்றும் துகள் வடிவிலும் கிடைக்கப் பெறுகின்றன.
கறுவா பெரும்பாலும் சமையலுக்கும், வெதுப்பக தயாரிப்புக்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. கறுவா ஒரு பல்துறை மசாலாவாகும். எந்த ஒரு உணவிற்கும் அதனை சேர்த்துக் கொள்ள முடியும். அதாவது சலாது, இனிப்புப் பண்டங்கள் பாண வகைகள் சூப், அவியல் மற்றும் சோர்ஸ் என்பனவகும். சூடான நீரில் கறுவா பட்டை துண்டுகள் அமிழ்த்தி கறுவா பாணம் தயாரிப்பதானது அமெரிக்க நாடுகள் மத்தியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாகும். அதே போல் கறுவா நறுமனம் மூடப்பட்ட தேயிலையும் பிரபல்யம் பெற்று வருகின்றது. சீனாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் பொதுவான உள்ளீடாக இது பயன்படுத்தப்படுகின்றது. கறுவா இலை எண்ணெய் மற்றும் கறுவா பட்டை எண்ணெயில் உணவு உற்பத்தி நறுமன கைத்தொழில் மற்றும் மருத்துவ கைத்தொழில் ஆகியவற்றில் வாசனை ஊட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.