இந்தியாவின் பிரதமராக தமிழர் ஒருவர் வரவேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் புதிய நகர்வுகளை பாஜக முன்னெடுத்து வரும் நிலையிலேயே, உள்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 2024 ஆண்டு மே மாதமளவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான வியூகங்களை வகுப்பதற்கு பாரதிய ஜனதாக் கட்சி தீவிரம் காட்டி வருகின்றது.
பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையிலேயே நேற்று, கோவிலாம்பாக்கம் சென்ற அமித் ஷா, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ் நாட்டு பாஜக உறுப்பினர்களுடன் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, தமிழ் நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே தமது விருப்பம் என அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமர் ஆவதை தவறவிட்டிருந்தோம் எனவும் அவ்வாறு தவற விடுவதற்கு தி.மு.கவே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் 25 இடங்களில் வெற்றி பெறுவதற்கான இலக்கை நிர்ணயிப்போம் எனவும் அதற்கான பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.