மின்சாரக் கட்டண திருத்தத்தின் அடிப்படையில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய மொத்த கட்டணங்களில் 3 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டணக் குறைப்பின்படி, முதல் 30 யூனிட் வரையிலான கட்டணம் 26.9 சதவீதம் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், 31 முதல் 60 யூனிட் வரையிலான மின் கட்டணம் 10.8 வீதமும், 61 முதல் 90 யூனிட் வரையிலான மின் கட்டணம் 7.2 வீதமும், 91 முதல் 180 யூனிட் வரையிலான மின் கட்டணம் 3.4 வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 180 மின் அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவுக்கு 1.3 வீத கட்டணம் குறைக்கப்படும் அதேவேளை மத ஸ்தலங்கள், தொண்டு நிறுவனங்களின் மின்சாரக் கட்டணம் 3.2 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தொழிற்சாலைகள், தெருவிளக்குகள் மற்றும் அரச நிறுவனங்களின் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்றும் ஹோட்டல்களுக்கான கட்டணம் 12.6 வீதத்தால் குறைக்கப்படும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.