இலங்கை அரசியலமைப்பின், 13வது திருத்தச்சட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெற்றுக்கொள்ளும் முறைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை இந்தியா, ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கையளிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் ஆராய்வதற்கே ரணில் விக்கிரமசிங்கவை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும், ஆனால் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி, 13 தமிழ் உறுப்பினர்கள் செயற்பட்டாலும், 13வது திருத்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என கஜேந்திரகுமார் அணி ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஏனைய 11 பேரின் கையெழுத்தை பெறுவதற்கு முயற்சித்திருந்தாகவும் எனினும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தமது ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டு தமது ஆவணம் தொடர்பான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.