ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமப்பை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டில் தேரர்களுடன் பேராயர்களும் இணைந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்த காலத்தில் ரோயல் பார்க் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியான ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பொது மன்னிப்பு விவகாரத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து தொடுக்கப்பட்டுள்ள ஆட்சேபனை வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையின்போது சமந்தவின் பொதுமன்னிப்பு வழக்கில் ஏராளமான பௌத்த தேரர்களும் கிறித்தவ பேராயர்கள் சிலரும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறிய வகையில் செயற்பட்டுள்ளமை குறித்து நேற்றைய தினம் சட்டமா அதிபர் தரப்பினால் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன்போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பான வாதங்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் வழக்கு அடுத்த தவணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.