முல்லைத்தீவு – குருந்தூர்மலை, குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணியை, வெளித்தரப்பினருக்கு வழங்க தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆய்வாளர் எல்லாவல மேதாநந்த தேரருக்கு பதிலளித்துள்ளது.
குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணிகள் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில், தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
குருந்தி விகாரைக்குச் சொந்தமில்லாத காணியை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விகாரையைச் சுற்றிலும் பல இடங்களில் பல்வேறு பௌத்த விகாரைகளின் இடிபாடுகள் உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தேரர் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே தற்போது, அரச காணியைப் பகிர்ந்தளித்தால், தவறான முறையில் காணி கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுட்டிக்காட்டக் கூடும் என்பதால், இந்தக் காணிகளைப் பகிர்ந்தளிக்காதிருக்குமாறும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் தொடர்பில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நேற்றைய தினம், எல்லாவல மேதானந்த தேரருக்கு விளக்கமளித்து பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் நிலவும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வாக, 1985 ஆம் ஆண்டின்போது, காடு மற்றும் வனவிலங்கு வலயங்களாக இருந்த காணிகள், அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.