இலங்கை அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி, தற்போதைய அமைச்சர் ரமேஷ் பத்திரண குற்றப் புலனாய்வுத் துறையில் செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அப்போதைய நிதி அமைச்சின் தொடர்பாடல் அதிகாரியாக செயற்பட்ட டில்ஷான் டி அல்விஸ் என்பவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்றைய தினம் கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகேவுக்கு அறிவித்திருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமைச்சுப் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி, தனது தனிப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்காக அரச பணத்தை மோசடி செய்து, அரசாங்கத்துக்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் இந்த விவகாரத்தில், விடயங்களை அறிந்தவர்கள் என கருதப்படும் சாட்சியாளரான விடயத்துக்கு பொறுப்பான எழுதுவினைஞர் அசேல பிரியங்கர வீரசூரிய என்பவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்யவுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர்.
அதன்படி இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் திலின கமகே சி.ஐ.டி.க்கு அனுமதியளித்தார்.
அதனடிப்படையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியான தொன் சிறில் ரொட்ரிகோ என்பவருக்கு ஹில்டன் ஹோட்டலில் தங்குவதற்காக அரச பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சிங்கப்பூர் நிறுவனத்தின் இலங்கை கிளையின் பணிப்பாளர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க எனவும், அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.