கிழக்குப் பல்கலையின் சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜெயந்தவினால் கையொப்பமிடப்பட்டு, இம்மாதம் 12 ஆம் திகதி, அதிசிறப்பு வர்த்தமான அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரகடனத்தின் படி, இதுவரை காலமும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கீழ் இருந்த சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ பீடத்தினுள் அடிப்படைத் தத்துவம், குணபாடம், நோய் நாடல் மற்றும் சிகிச்சை ஆகிய மூன்று கற்றல் துறைகள் என்பன உள்வாங்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறைமையான சித்த வைத்தியத்தை முறையாகக் கற்பித்து அங்கீகரிக்கும் முனைப்புடன் கிழக்கு மாகாண சித்த வைத்தியர்கள் சங்கத்தினால், சித்த மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை 2004 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக் கழகத்திடம் முன்வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடத்தைத் தாபிப்பதற்கு கிழக்கு பல்கலைக்கழகப் பேரவை தீர்மானித்ததுடன், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக திருகோணமலை, கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலையில் விசேட சித்தமருத்துவ நிபுணர் மருத்துவர் என். வர்ணகுலேந்திரன் கல்விசார் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பின், 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுதேச வைத்தியத்துக்கான நிலையியற் குழு, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ, சத்திர சிகிச்சைமாணி பட்டத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியது. அதன்படி 20 மாணவர்கள் சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

2010 ஆம் ஆண்டளவில் இந்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, சித்த மருத்துவ பீடத்துக்குத் தேவையான சகல பௌதிக வளங்களும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதோடு, ஆறு ஆய்வு கூடங்களும் அமைக்கப்பட்டன. அத்துடன் சித்த மருத்துவ அலகில் கற்கின்ற மாணவர்களின் பயிற்சிகளுக்காக கோணேசர்புரியில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 7 ஏக்கர் காணியில் சித்த மருத்துவ போதனா வைத்தியசாலையும் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சித்த மருத்துவ, சத்திர சிகிச்சைமாணிப் பட்டதாரிகள் ஒரு வருட உள்ளகப் பயிற்சியையும் பெற்றுக் கொள்ள முடிந்தது.

உள்ளகப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் சித்த மருத்துவ, சத்திர சிகிச்சைமாணி பட்டதாரிகள் இலங்கை ஆயுர்வேத மருத்துவப் பேரவையில் பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களாக சிகிச்சையில் ஈடுபட வழிசெய்யப்பட்டது.

இந்நிலையில், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடத்தைத் தாபிப்பதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விதந்துரைக்கப்பட்டு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜெயந்தவினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பீடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply