தமிழர் தாயகத்தில் இரகசியமாக அமைக்கப்படும் மற்றுமொரு பௌத்த விகாரை!

திருகோணமலை, புல்மோட்டை நகரில் புதிய பௌத்த விகாரையொன்றினை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பிக்குகள் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் பௌத்த கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக புல்மோட்டை மற்றும் தென்னை மரவாடியில் நிலங்கள் சுவீகரிக்கும் நடவடிக்கையிலும் பிக்கு ஒருவர் ஈடுபட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை புல்மோட்டை நகருக்கு தெற்கே அரிசிமலையில் வசித்து வரும் அம்பாந்தோட்டையை சேர்ந்த திலகவன்ச நாயக்கா என்ற பிக்கு ஒருவரே இந்த விகாரை அமைப்பு நடவடிக்கைகளின் பிரதானியாக செயற்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் விகாரை திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், குறித்த பகுதியில் சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், விகாரை அமைப்பு திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த நகரம் பாரம்பரிய தமிழர் தாயகத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் குறிப்பிடத்தக்க மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததிலிருந்து, புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சிங்களக்குடியேற்றம் குறித்து தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply