கண்டி பேராதனை வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஊசி மருந்து விசமான நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார்.
வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் பிரதமரிடம் இந்த மரணங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.
பேராதனை வைத்தியசாலையில் வழங்கப்பட்ட ஊசிமருந்துகள் விசமான காரணத்தினால் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு முன்னரும் பல வைத்தியசாலைகளில் பல மரணங்கள், மருந்து விசமானதால் இடம்பெற்றுள்ளன.
இந்த ஊசி மருந்து தடைசெய்யப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த போதும், தற்போதும் இந்த ஊசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. தடைசெய்யப்பட்டால் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனவே சுகாதார அமைச்சருடன் இணைந்து பிரதமர் உடனடியாக விசாரணைகளை நடத்தி விரைவில் இதற்கு ஒரு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இந்தியா வழங்கிய கடன் உதவியை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரு மருந்துகளே நோயாளிகளிற்கு இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையின் மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட பின்னரே, இந்த மருந்துகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டன.
இதன் மூலம் நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அதற்கு சுகாதார சேவைபணிப்பாளர் நாயகம் தலைமை தாங்குவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.