குமுதினி படகு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் முன்னர் ஈடுபட்டிருந்த நிலையில் திருத்த வேலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே இன்று மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகைப் படகு என்பன, நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில், குமுதினிப் படகு பழுதடைந்ததையடுத்து, வடதாரகைப் படகு மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
தற்போது, குமுதினிப் படகு திருத்தப் பணிகள் நிறைவுற்று இன்று மதியம் 1 மணியளவில் விசேட பூஜை இடம்பெற்று இன்றிரவு குமுதினி படகு கடலில் இறக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நெடுந்தீவிற்கான போக்குவரத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்கள் தீர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.