கிளிநொச்சி வலய பணிப்பாளர் குடிபோதையில் அட்டகாசம் செய்தமைக்கு எதிராக வடமாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் விடுத்துள்ளது.
முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் மற்றும் அநாகரிகமான செயற்பாடுகளுக்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை இருவாரகாலத்துக்குள் வடமாகாண கல்வியமைச்சு எடுக்கத்தவறின், இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கி.கமலராஜனின் நிர்வாக முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் மற்றும் இரத்மலானையிலுள்ள வடமாகாண அரச உத்தியோகத்தர்களின் தங்குமிடத்தில் குடிபோதையில் மிகக் அநாகரிகமாக செயற்பட்டிருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றை பதிவுத்தபால் மூலம் அனுப்பியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவுத்துள்ளார்.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பாக இதுவரை பொருத்தமான நடவடிக்கைகளை வடமாகாண கல்வியமைச்சு மேற்கொள்ளப்படாமை குறித்தும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த கடிதத்தில் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜனின் நிர்வாக முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் புரிந்த குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பாக இதுவரை பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து, தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் 2020.06.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரால் 9 குற்றச்சாட்டுக்கள், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டு, அப்போது வடமாகாண ஆளுநராகவிருந்த, பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கும் பிரதியிடப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதை அறிய முடிகின்றது எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், குறித்த வலய கல்விப் பணிப்பாளரின் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகள் குறித்து, கிளிநொச்சி கல்வி கலாசார மேம்பாட்டு இணையத்தால் 28 விடயங்கள் பட்டியலிடப்பட்டதாகக் குறிப்பிட்டு, குறித்த விசாரணை அறிக்கையை வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 2021.05.17 ஆம் திகதி கடிதம் மூலம் அறிக்கை கோரப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
அந்த அறிக்கை வடமாகாண ஆளுநர் செயலகத்துக்குக் கிடைக்கப்பெறாமை காரணமாக , வடமாகாண ஆளுநரின் உதவிச் செயலாளரால் 2022.02.11 ஆம் திகதி G/NPC/A7/ZDE.Matt/2022/02 இலக்க கடிதம் மூலம் குறித்த விசாரணையை நடத்தி ஒரு வார காலத்துக்குள் அனுப்பிவைக்குமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆயினும் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் அதிகார துஸ்பிரயோகம், முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகத்தினரால், குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் அதிகார துஸ்பிரயோகங்கள், பிரதேசவாத செயற்பாடுகள், களவு, உத்தியோகத்தர்களை வசைபாடுதல், பழிவாங்கல் இடமாற்றங்கள், சுய ஒழுக்கம் அற்ற நிலை போன்ற குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களைக் குறிப்பிட்டு, அவரது பழிவாங்கல்கள், முறைகேடுகள் தொடர்பாக 2022.09.22 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் பரீட்சைக்குப் பொறுப்பான கிளிநொச்சி தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து பொறுப்புக்களை தன்னிச்சையாகப் பெற்று தனக்கு இசைவான நபர்களுடன் பரீட்சைகளை நடத்திவருகின்றார் என்னும் குற்றச்சாட்டும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் பொருத்தமற்ற நடவடிக்கையென பரீட்சைத் திணைக்கள ஆணையாளரால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியிருந்த போதும் தன்னிச்சையாகவே பக்கச்சார்பாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவரின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் துணைபோகாத பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர்கள் பலர் பழிவாங்கல் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது பழிவாங்கல் செயற்பாடுகளுக்கு முன்னைய செயலாளர்களும் வலயக்கல்விப் பணிப்பாளரால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். தற்போதுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்களையும் வெளியேற்றும் முயற்சியாக பலரின் மாதாந்த வேலைத்திட்டம், மற்றும் தரம் கணிப்பீடு போன்றவற்றையும் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து தடுத்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதிருந்த வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரோ, வடமாகாண ஆளுநரோ அக்கறையுடனோ பொறுப்புடனோ செயற்பட்டிருக்கவில்லை என்பதையே அவதானிக்க முடிகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2022.12.20 ஆம் திகதியளவில் ஆரம்பப் புலனாய்வு நடவடிக்கைக்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழுவும் பக்கச்சார்பாகவே செயற்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய ஊழியரொருவரின் வாக்குமூலத்தினை, குறித்த விசாரணைக்குழு, குற்றம் சாட்டப்பட்டிருந்த வலயக் கல்விப் பணிப்பாளரிடம், தமது ஒப்பமிடாத பிரதியொன்றை வழங்கிச் சென்றதன் மூலம் விசாரணைக் குழுவின் நம்பிக்கைத் தன்மை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தெற்கு வலயத்தில் வைத்து நடத்தப்பட்ட ஆரம்பப் புலனாய்வு விசாரணையின்போது குறித்த ஊழியர் வழங்கிய வாக்குமூலத்தில் திணைக்களத்திற்குச் சொந்தமான PC 1085 இலக்க வாகனத்தில் ஆடு கொண்டு வரப்பட்டு 12 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டமை தொடர்பாகவும், DAA 7846 இலக்க திணைக்கள வாகனத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தனது மனைவி பிள்ளைகளை ஏற்றியிறக்கிய விடயங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச சொத்துக்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாகவும், குறித்த சொத்துக்களை தனது முறைகேடான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியமை தொடர்பாகவும் மிகத் தெளிவான சாட்சியங்கள் வழங்கப்பட்ட நிலையிலும், வடமாகாண கல்வியமைச்சோ, வடமாகாண ஆளுநரோ எந்தவொரு பொருத்தமான நடவடிக்கைகளும் எடுத்திருக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளர், தனது மகளுக்கு வீட்டுக்கு வந்து கற்பிக்க மறுத்த, கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் அ.த.க.பாடசாலை ஆசிரியரை பழிவாங்கும் முகமாக 30 கி.மீற்றருக்கு அப்பால் இடமாற்றம் வழங்கியிருந்தார்.
அதேபோன்று தனது மகள் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்படவில்லை என்பதற்காக கிளிநொச்சி மத்தியகல்லூரி ஆரம்பப் பாடசாலை அதிபரை இடமாற்ற முனைந்தார்.
இரு சம்பவங்களும் தடுக்கப்பட்டமையையும் நினைவூட்டுகின்றோம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு துணைபோகாத காரணத்துக்காக பலர் பழிவாங்கப்பட்டுள்ளமையையும் குறிப்பிட விரும்புவதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு உரிய நேரங்களில் உரிய நடவடிக்கைகள் வடமாகாண கல்வியமைச்சும், வடமாகாண ஆளுநரும் எடுத்திராததன் விளைவாக வடமாகாண கல்விப் புலத்தையே அவமானத்துக்கு உட்படுத்தும் வகையில், குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் இரத்மலானையிலுள்ள வடமாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட விடுதியில் குடிபோதையில் சென்று அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியும், தகாத வார்த்தைகள் பேசியும், தங்குமிடத்தையே சீரழித்திருந்தார்.
அங்கு தங்கியிருந்த ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தார். இவ்விடயம் குறித்து அங்கு தங்கியிருந்த மருத்துவர் உட்பட பொறியியலாளர், சுகாதார பரிசோதகரால் வடமாகாண பிரதம செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும், அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது, வடமாகாண கல்விப்புலத்தை சீரழிக்கத்; துணைபோகும் நடவடிக்கையாகவே கருதுகின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அச்சுறுத்தல்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வரும் வடமாகாண கல்விச் சமூகத்தை, வழிநடத்த வேண்டிய கல்வி அதிகாரிகள் தரத்தில் உள்ள ஒருவரின் இவ்வாறான கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு உடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவதற்குரிய நம்பிக்கையின் அறிகுறியாக வடமாகாண கல்வித் திணைக்களத்திலோ அல்லது வடமாகாண கல்வியமைச்சிலோ உடனடியாக இணைக்கப்பட்டே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான இணைப்பின் மூலமே பாதிக்கப்பட்ட பலர் சுதந்திரமாக சாட்சியங்களை வழங்குவதற்குரிய சூழல் ஏற்படுத்தப்படும்.
கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பாக விரிவான விசாரணையை கோரும் அதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாட்சியங்களை வழங்கவும் பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் மற்றும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை இருவார காலத்துக்குள் வடமாகாண கல்வியமைச்சு எடுக்கத்தவறின், இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் என்பதையும் தயவுடன் அறியத்தருகின்றோம் எனவும் அந்தக் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதம் வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.