தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடக்கும் கொலைகள் தொடர்பில் உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொலையாளிகள் சம்பந்தமாக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இதற்கான நடவடிக்கைகளின் போது, தேவையற்ற அழுத்தங்களை கொடுக்கவும் தலையீடுகளை செய்யவும் எவருக்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தென் மற்றும் மேல் மாகாணங்களில் கடமையாற்றும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் திறமையின்மையே இந்த மாகாணங்களில் கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணம் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அப்படியான அதிகாரிகளை உடனடியாக நீக்கி விட்டு, தகுதியான அதிகாரிகளை நியமிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.