பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய வெலிக்கடையாய பகுதியில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் முயற்சியில், சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையடுத்து விசேட அதிரடிப்படையினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில், பல துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 22 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும், மினுவாங்கொடை மற்றும் அம்பலாங்கொடை ஆகிய இடங்களில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் முன்னதாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின்போது, பிரதி பாடசாலை அதிபர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
