அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமேசன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அன்டி ஜாஸ்ஸி, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் அமேசன் நிறுவனம் இந்தியாவில் 1.23 லட்சம் கோடியை முதலீடு செய்யும் என்று அன்டி ஜாஸ்ஸி அறிவித்தார். அத்தோடு, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒரு கோடி சிறுவணிகங்களை டிஜிட்டல் மயமாக்கவும், 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே அமேசான் நிறுவனம் இந்தியாவில் 90,200 கோடியை முதலீடு செய்துள்ளது.
இது போல இந்தியாவில் 82,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாகவும், கூகுள் நிறுவனத்தின் பின்டெக் செயல்பாடுகளுக்கான மையத்தை குஜராத்தில் திறக்க உள்ளதாகவும் சுந்தர் பிச்சை அறிவித்தார். இது குறித்து சுந்தர் பிச்சை கூறுகையில், இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்ததைப் பெருமையாக கருதுகிறேன். கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டுவரும் 10 பில்லியன் டொலர் முதலீடு குறித்து மோடியிடம் தெரிவித்தேன். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக அவர் கொண்டிருக்கும் லட்சியம் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது, என்று தெரிவித்திருக்கிறார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்ய நாதெல்லாவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பில், செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தின் தாக்கம் குறித்து பேசியுள்ளனர்.
இவை தவிர, செமி கண்டெக்டர் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோன் டெக்னோலஜிஸ், இந்தியாவில் 6,750 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீட்டை மேற்கொள்ளும் என்று அதன் சி.இ.ஓ. எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
அப்பிள், ஓப்பின் ஏ.ஐ., பிளக்ஸ், எஃப்.எம்.சி. கோர்ப்பரேசன் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்கப் பயணத்தில் சந்தித்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது.
