முதலில் நீங்கள் மணிப்பூரைக் கவனியுங்கள் – ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி எம்.பி. பதிலடி

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதே ஓர் அரசாங்கத்தின் முதல் கடமை என்றும், பஞ்சாப் மாநில அரசு சட்ட ஒழுங்கைக் காக்க தவறிவிட்டதாகவும் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்திருந்தார்.

அவரது விமர்சனத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான ராகவ் சத்தா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய ராகவ் சத்தா, பஞ்சாப் குறித்து ராஜ்நாத் சிங்கிற்குத் தவறான தகவல் கிடைத்துள்ளது என நினைக்கிறேன். பஞ்சாபில் முதலமைச்சர் பக்வந்த் மான் தலைமையில் நடைபெறும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் மாநில சட்ட ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது.

இதே வேளை, மணிப்பூர் எரிந்து கொண்டிருப்பதையும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிற்பதையும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதையும் பாதுகாப்பு அமைச்சர் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனவே மற்ற மாநிலங்களைச் சுட்டிக்காட்டும் முன்பாக மணிப்பூர் வன்முறைக்கு முதலில் பொறுப்பேற்குமாறு வலியுறுத்துகிறேன்.

டெல்லியில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன. அங்கு தினமும் கொலை, கற்பழிப்பு, கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன. டெல்லியில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட டெல்லி மற்றும் மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. அதனை முதலில் கவனத்தில் எடுக்கவேண்டும், என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான ராகவ் சத்தா தெரிவித்திருக்கிறார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply