கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின் குமிழ் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ஒரு லட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்துக்கான பில் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களைக் காட்டிலும் மே மாதத்தில் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, மாநிலம் தழுவிய போராட்டத்தில் தொழில் துறையினர் ஈடுபட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொப்பல் மாவட்டத்தில் உள்ள பாக்யநகரைச் சேர்ந்த கிரிஜம்மா (வயது 90) என்ற முதியவர் தனது வீட்டில் ஒரே ஒரு மின் குமிழை மட்டுமே பயன்படுத்தும் நிலையில், அவருக்கு ஜூன் மாத மின்சாரக் கட்டணமாக ஒரு லட்சத்து மூவாயிரத்து 315 ரூபாவுக்கு பில் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுவரை மாதத்துக்கு 70 முதல் 90 ரூபா வரை மட்டுமே மின்கட்டணம் வரும். இந்த முறை எப்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வந்தது?, என மின்சாரத் துறை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறுகையில், இயந்திரக் கோளாறு காரணமாக மூதாட்டிக்கு தவறான பில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவர் அந்தத் தொகையை மின் கட்டணமாகச் செலுத்த வேண்டியதில்லை. மின்சாரத்துறை ஊழியர்கள் அவரது வீட்டுக்குச் சென்று விளக்கம் அளித்துள்ளனர், என்று தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தப் பிரச்சினையில் அமைச்சர் தலையிட்டதால் மூதாட்டிக்குச் சிக்கல் தீர்ந்துள்ளது.
இதேபோல், உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள கடை ஒன்றுக்கு மே மாத மின்சாரக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவுக்கு பில் வந்ததால் அதன் உரிமையாளர் கிரிஷ் ஷெட்டி என்பவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த மாதத்தில் 13 லட்சத்து பதினோயிரத்து 155 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான வரியுடன் சேர்த்து ஒரு கோடி ரூபா மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின்சாரத்துறை ஊழியர்கள் கூறினர். இதனால், எனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் மறு கணக்கீடு செய்யப்பட்டது. அப்போது 1,574 யூனிட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டமை தெரியவந்தது. இயந்திரக் கோளாறால் தவறு ஏற்பட்டதாக ஊழியர்கள் விளக்கம் அளித்தனர், என்று தெரிவித்திருக்கிறார்.